அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மறைமலை அடிகள் மகன் உயிரிழப்பு: இறுதிச்சடங்குக்கு உதவ கோரிக்கை
புகழ்பெற்ற தமிழறிஞர் மறைமலை அடிகளின் மகன் மறை.பச்சையப்பன் (78), உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கிற்கு அரசு உதவ வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.மறைமலை அடிகள் 1876 முதல் 1950-ம் ஆண்டு வரை வாழ்ந்த முக்கியமான தமிழறிஞர் ஆவார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழுக்காகவும் பல்வேறு பணிகளை அவர் மேற்கொண்டார்.அவரது மகன் மறை.பச்சையப்பனுக்கு எலும்பு தொடர்பான உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்குள்ள எலும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.மறைமலை அடிகள் புகழ்பெற்ற தமிழறிஞராக இருந்த போதிலும், அவரது மகன் பச்சையப்பன் தனது சிகிச்சைக்கான செலவைக்கூட சமாளிக்க முடியாத நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை அவரது மகள் லலிதா மற்றும் மகன் சிவகுமார் ஆகியோர் கவனித்து வந்தனர்.இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மறை.பச்சையப்பன் உயிரிழந்தார். அவரது உடல்நிலைக்கு உயர் சிகிச்சை அளிக்க ஏற்கனவே குடும்பத்தினர் உதவி கோரியிருந்தனர். தற்போது இறுதிச்சடங்கை நடத்துவதற்கும் தேவையான பணம் இல்லாமல் குடும்பத்தினர் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.இதனால், மறை.பச்சையப்பனின் இறுதிச்சடங்கை மேற்கொள்ள அரசு உரிய உதவியை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.