அமெரிக்கா - லெபனான் இடையே 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி விமான சேவை
அமெரிக்கா மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களால் சுமார் 40 ஆண்டுகளாக இந்த சேவை நிறுத்தப்பட்டிருந்தது.1985ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் பதவியில் இருந்தபோது, லெபனானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 'பிளைட் 847' என்ற அமெரிக்க விமானத்தை கடத்திய சம்பவம் நடந்தது. அந்த தாக்குதலில் அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லெபனானுடனான நேரடி விமான போக்குவரத்தை அமெரிக்கா நிறுத்தியது.இந்நிலையில், நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு அந்தத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் லெபனான் அதிபர் ஜோசப் அவுன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பல தசாப்தங்களாக லெபனான் பல்வேறு சவால்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இனி அந்த நாட்டுக்கு உரிய மரியாதையும் முழுமையான ஆதரவும் கிடைக்க அமெரிக்கா துணைநிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.