அப்துல் கலாம் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மரியாதை
முன்னாள் குடியரசுத் தலைவரும், புகழ்பெற்ற விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அப்துல் கலாமின் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அவரது திருவுருவப் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பிறந்த அறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீன் - ஆஷியம்மா தம்பதியருக்கு 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி மகனாகப் பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் பயின்ற அவர், திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து, சென்னையிலுள்ள எம்.ஐ.டி.யில் விண்வெளிப் பொறியியல் பயின்று முதுநிலைப் பட்டம் பெற்று அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1960ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சிப் பணியைத் தொடங்கினார்.