அப்துல் கலாம் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மரியாதை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
15 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 15 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அப்துல் கலாம் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மரியாதை

அப்துல் கலாம் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மரியாதை

முன்னாள் குடியரசுத் தலைவரும், புகழ்பெற்ற விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அப்துல் கலாமின் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அவரது திருவுருவப் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பிறந்த அறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீன் - ஆஷியம்மா தம்பதியருக்கு 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி மகனாகப் பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் பயின்ற அவர், திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து, சென்னையிலுள்ள எம்.ஐ.டி.யில் விண்வெளிப் பொறியியல் பயின்று முதுநிலைப் பட்டம் பெற்று அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1960ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சிப் பணியைத் தொடங்கினார். இந்திய ராணுவத்திற்கான சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்ததுடன், எஸ்.எல்.வி., எஸ்.எல்.வி.-3 மற்றும் ரோகிணி-1 செயற்கைக்கோள் ஏவுதல் திட்டங்களிலும் முக்கியப் பங்காற்றினார். மேலும், திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் உள்ளிட்ட ஏவுகணைத் திட்டங்களில் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார். அவரது அறிவியல் பங்களிப்புகள் இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளாக அமைந்தன. உயரிய விருதுகளும் குடியரசுத் தலைவர் பொறுப்பும் அப்துல் கலாமின் அறிவியல் சேவைகளைப் பாராட்டி, 1981ஆம் ஆண்டு பத்ம பூஷண், 1990ஆம் ஆண்டு பத்ம விபூஷண், 1997ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுதச் சோதனையில் முக்கியப் பங்காற்றிய அவர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காக எடை குறைந்த கால்தாங்கிகளையும் உருவாக்கினார். 2002 முதல் 2007ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். அறிவியல் துறையில் மட்டுமின்றி, எழுத்துப் பணியிலும் சிறந்து விளங்கிய அப்துல் கலாம், ‘அக்னிச்சிறகுகள்’, ‘இந்தியா 2020’, ‘வெளிச்சப் பொறிகள்’, ‘மிஷன் இந்தியா’, ‘திருப்புமுனைகள்: சவால்களுக்கு இடையே ஒரு பயணம்’, ‘எனது பயணம்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். அரசு அதிகாரிகள் பங்கேற்பு இந்த மரியாதை நிகழ்ச்சியில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். அருள் பிரகாசம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர் என்று தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.