முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் தர்பூசணிப் பழத்தில் அவரது உருவத்தைத் தத்ரூபமாகச் செதுக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமின் பிறந்தநாள் அக்டோபர் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாணவர்களிடையே அவரது நினைவையும் சிந்தனைகளையும் போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமையான இன்று நடைபெற்றன. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் தனது தனித்துவமான கலைப்படைப்பு மூலம் கலாமுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
Advertisement
ஒரு முழு தர்பூசணிப் பழத்தின் மேற்பரப்பில் கலாமின் முகத்தை அவர் நுணுக்கமாகச் செதுக்கியுள்ளார். அவரது தனித்துவமான சிகை அலங்காரம், கண்கள், புன்னகை தவழும் முகம் என ஒவ்வொரு அம்சத்தையும் தத்ரூபமாக வடிவமைத்துள்ள விதம் பார்ப்பவர்களை வியக்கச் செய்கிறது. இந்த மாணவரின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வேகமாகப் பரவி வருகின்றன. இதையடுத்து, அவரது முயற்சிக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். “மாணவர்களே, கனவு காணுங்கள்” என இளைஞர்களுக்கு ஊக்கமளித்த அப்துல் கலாமுக்கு, ஒரு அரசுப் பள்ளி மாணவர் தனது கைவண்ணத்தின் மூலம் அளித்துள்ள இந்த வித்தியாசமான அஞ்சலி இணையவாசிகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.