சென்னை அம்பத்தூர் பட்டரைவாக்கம் பகுதியில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிடாலேண்ட் நிறுவனம் பிரம்மாண்டமான தரவு மையத்தை அமைத்துள்ளது. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 4 ஏக்கர் பரப்பளவில் இந்தத் தரவு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.5,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் 56 மெகாவாட் மின்சாரத் திறன் கொண்டதாகும். இந்தத் தரவு மையத்தைத் தமிழக முதலமைச்சர் விஜய், சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யாங்குடன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, சிங்கப்பூர் பாரம்பரிய முறைப்படி அன்னாசிப் பழத்தை உருட்டி வைத்து மையத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், விஜய் ஏன் அன்னாசிப் பழத்தை உருட்டினார் என்பதற்கான பின்னணி கவனம் பெற்றுள்ளது. அன்னாசிப் பழத்தை உருட்டுவது ஏன்? சிங்கப்பூரில் புதிய அலுவலகங்கள் அல்லது நிறுவனங்களைத் தொடங்கும்போது அன்னாசிப் பழத்தைப் பயன்படுத்துவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.
Advertisement
ஹோக்கியன் மொழியில் அன்னாசிப் பழம் ‘ஓங் லாய்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சொல்லுக்கு அதிர்ஷ்டத்தையும் செல்வ வளத்தையும் வரவழைக்கும் பொருள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக அன்னாசிப் பழம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் புதிய வீடு, அலுவலகம் அல்லது நிறுவனத்தைத் தொடங்கும்போது, நுழைவாயிலில் இருந்து உட்புறமாக அன்னாசிப் பழத்தை உருட்டுவது வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு செய்வதால் புதிய தொடக்கம் வெற்றிகரமாக அமைவதுடன், செல்வமும் லாபமும் பெருகும் என்பது அங்குள்ள பாரம்பரிய நம்பிக்கையாகும். இந்தச் சடங்கின் அடிப்படையிலேயே, சென்னையில் புதிய தரவு மையத்தைத் திறந்து வைத்தபோது முதலமைச்சர் விஜய்யும் அன்னாசிப் பழத்தை உருட்டியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ள இந்தச் செயலுக்குப் பின்னால் சிங்கப்பூரின் பாரம்பரிய நம்பிக்கை இருப்பது குறிப்பிடத்தக்கது.