அசாம் மாநிலத்தில் காசிரங்கா தேசியப் பூங்கா அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் காசிரங்கா தேசியப் பூங்கா அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) மினிபஸ் ஒன்றும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோலாகாட் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெறவும் வாழ்த்தியுள்ளார். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோல், படுகாயமடைந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.