கர்நாடகாவில் மகளின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு வழங்குவதற்காக கணவருடன் பைக்கில் சென்ற பெண், லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது கணவர் படுகாயமடைந்தார். கர்நாடக மாநிலம், பெங்களூரு புறநகர் மாவட்டம், தொட்டபள்ளாப்புரா தாலுகா, சிக்கமதுரே அருகேயுள்ள உத்திச்சிக்கனஹள்ளியைச் சேர்ந்தவர் விஜய்குமார் (48). இவரது மனைவி லட்சுமி தேவி என்ற தேவம்மா (42). இந்தத் தம்பதிக்கு இந்திராணி என்ற மகள் உள்ளார். இந்திராணிக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வரும் 26, 27 ஆகிய தேதிகளில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி விஜய்குமாரும் அவரது மனைவியும் உறவினர்கள், நண்பர்களுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழ்களை வழங்கி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை இருவரும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக பைக்கில் புறப்பட்டுச் சென்றனர். நெலமங்களா அருகே மைலானஹள்ளி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி அவர்களது பைக் மீது மோதியது.
Advertisement
இதில் தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி இருவரும் லாரியின் சக்கரங்களில் சிக்கினர். இந்த கோர விபத்தில் லட்சுமி தேவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஜய்குமாரின் கால்கள் மீது லாரி ஏறியதில் அவை பலத்த சேதமடைந்தன. மனைவி தன் கண்முன்னே உயிரிழந்ததையும், தனது கால்கள் சிதைந்த நிலையையும் கண்டு விஜய்குமார் கதறி அழுதார். படுகாயமடைந்த விஜய்குமார் நெலமங்களாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற நெலமங்களா புறநகர் போலீசார், லட்சுமி தேவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் திருமண ஏற்பாடுகளில் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் இந்திராணி உள்ளிட்ட உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.