வங்கக்கடலில் உருவாகும் ‘அக்வான்’ புயல்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த 13-ம் தேதி நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (நவம்பர் 14) அதிகாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நீடிக்கிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். அதன்பிறகு வடக்கு - வடமேற்கு திசையில் நகரும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நவம்பர் 16-ம் தேதி மாலை தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் வழியாக பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதி முதல் மாலத்தீவின் வடக்குப் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதேபோல், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும் காணப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான மழை நிலவரம்: நவம்பர் 14: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். நவம்பர் 15: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும். நவம்பர் 16:மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். நவம்பர் 17: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நவம்பர் 18: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நவம்பர் 19: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 20:மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.