அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு
அசாமில் கனமழை தொடர்ந்துவருவதால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாநிலம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவசாகர் மற்றும் கோலாகாட் மாவட்டங்களில் பதிவான புதிய உயிரிழப்புகளால் மொத்த பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தின் 7 மாவட்டங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.வெள்ளப் பெருக்கால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதுடன், சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட முக்கிய அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மீட்புப் பணிகளில் இந்திய ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், அடுத்த சில நாட்களுக்கு அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக வெள்ள நிலைமை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.