அசாமில் கனமழை, வெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக உயர்வு
அசாமில் பெய்துவரும் கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.பருவமழையால் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் மாநிலம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. கோல்பாரா, கச்சார், லக்கிம்பூர், திப்ருகர், ஜோர்ஹாட், பிஸ்வநாத், சராய்தியோ, நல்பாரி, பக்சா, சிவசாகர், தர்ரங், சோனித்பூர், தின்சுகியா, உதால்குரி, கோலாகாட், கர்பி அங்லோங் உள்ளிட்ட மொத்தம் 25 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. மேலும், 600-க்கும் அதிகமான கிராமங்களும் இந்த இயற்கை பேரிடரால் பாதிப்பை சந்தித்தன.தற்போது பல இடங்களில் வெள்ளநீர் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளதால், பாதிப்பின் தீவிரமும் குறைந்து வருகிறது. இருப்பினும், வெள்ளம் தொடர்பான சமீபத்திய சம்பவங்களில் மேலும் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.இன்னும் சிவசாகர், கோலாகாட், ஜோர்ஹாட், நகாவன் மற்றும் சராய்தியோ ஆகிய 5 மாவட்டங்களில் மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை.