விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணம் உயர்வு: அமைச்சர் சம்பத்குமார் அறிவிப்பு
சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.மாணவர்களுக்கு தரமான, சத்தான உணவு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், சமூகநீதி விடுதிகளில் வழங்கப்படும் உணவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,800-ஆகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,000-ஆகவும் அதிகரிக்கப்படுகிறது. இதற்காக அரசுக்கு கூடுதலாக ரூ.32.53 கோடி செலவாகும்.மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் உள்ள மாணவியர்கள் சென்னையில் கல்வி பயில்வதற்கு உதவும் வகையில், புதிய சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி தொடங்கப்பட உள்ளது.
உணவு மற்றும் தங்கும் வசதியுடன் அமைக்கப்படும் இந்த விடுதியில் 100 மாணவியர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.54 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் 1,238 சமூகநீதி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் சுகாதாரமான வாழ்விடச் சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து விடுதிகளிலும் உள்ள ஜன்னல்களுக்கு ரூ.26.85 கோடி செலவில் தரமான கொசுவலைகள் பொருத்தப்பட உள்ளன.