மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் மன்றமாக சட்டமன்றம் இருக்க வேண்டும் - அண்ணாமலை
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, பல்வேறு அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
கல்லூரிகளில் மாணவர் குழுக்கள் அமைத்து, அரசியல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதன் மூலம் அரசியல் குறித்து புரிந்துகொள்வதுடன், அரசு அதிகாரிகளிடம் தங்களின் பிரச்சினைகளை எடுத்துச் செல்வது உள்ளிட்ட ஜனநாயக செயல்பாடுகளையும் மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும் என்றார். கல்லூரி அரசியல் முறையாக செயல்பட்டால், பல்வேறு பிரச்சினைகளுக்கு அது தீர்வாக அமையும் என்றும் தெரிவித்தார்.உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும், தமிழகத்தில் கல்லூரி அரசியல் மோசமான நிலையில் இருப்பதாக அண்ணாமலை விமர்சித்தார். இதனால் எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு தேவையான இளம் தலைவர்கள் உருவாகும் வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.திரைப்படங்களைப் பொறுத்தவரை, சென்சார் போர்டின் விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார். திரைப்படங்கள் சென்சார் விதிகளையும் குறியீடுகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார். சமீபத்தில் வெளியாகும் சில திரைப்படங்கள் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இல்லை என்றும், பெண்களை ஆபாசமான முறையில் சித்தரிக்கும் படங்களும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.சமூக வலைதளங்களின் பயன்பாட்டிலும் கட்டுப்பாடுகள் தேவை என்று அவர் கூறினார்.
சமூக வலைதளங்கள் மூலம் பல நல்ல விஷயங்கள் நடைபெறும் அதே நேரத்தில், பல்வேறு தவறுகளும் நடக்கின்றன என்றார். உலகின் பிற நாடுகள் சமூக வலைதளங்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டு வரும் நிலையில், இந்தியா ஏன் தயக்கம் காட்டுகிறது என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.சட்டமன்றம் நாடக மேடையாக மாறக்கூடாது என்றும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாக விவாதிக்கும் இடமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் தற்போது சட்டமன்றம் பழைய பஞ்சாயத்துகளைத் தீர்த்துக்கொள்ளும் இடமாக மாறி வருவதாக விமர்சித்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்த பிரச்சினைகள் முதல், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான பஞ்சாயத்துகள் வரை அவையிலேயே பேசித் தீர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்ஆளும் கட்சியைச் சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் புதிதாக வந்தவர்கள் என்றாலும், அவர்கள் வேகமாக முன்னேறி வருவதாக அண்ணாமலை குறிப்பிட்டார். இந்நிலையில், தமிழக சட்டமன்றம் நாடக மன்றமாக மாறிவிடுமோ என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.