மேகதாது விவகாரத்தில் தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? - உதயநிதி கேள்வி
காவிரி நீர் தொடர்பான பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது, மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுப்பதில் கர்நாடக அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக முதலமைச்சர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, மேகதாது அணை கட்டுவதற்கான நிதி உதவியை கோரியதாகவும், அதேபோல் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து அணை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.மேலும், கடந்த ஒரு மாதமாக மேகதாது அணை தொடர்பான முயற்சிகளில் கர்நாடகாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேபோல், தமிழகத்திலும் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்குவதாக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படாமல், பகுதியளவிலேயே தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.