முதல் அமைச்சர் விஜய்க்கு புகழ்ச்சி பிடிக்காது: ஆதவ் அர்ஜுனா
தமிழக சட்டசபையில் உறுப்பினர்கள் தங்கள் கட்சித் தலைவர்களை பாராட்டிப் பேசுவது வழக்கமாக உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி பல்வேறு உறுப்பினர்கள் தங்களது தலைவர்களை புகழ்ந்து பேசுகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், இன்று முதல்-அமைச்சர் விஜய்யை பாராட்டிப் பேசினார்.அவர் பாடல் வரிகள் மூலம் முதல்-அமைச்சர் விஜய்யை புகழ்ந்து கொண்டிருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டு பேசினார்.அப்போது அவர், “முதல்-அமைச்சர் விஜய், மற்ற முதல்-அமைச்சர்களைப் போல் இல்லை. அவருக்கு புகழ்ச்சி பிடிக்காது. எனவே, உறுப்பினர்கள் தங்களது தொகுதி தொடர்பான தேவைகள் குறித்து மட்டும் சட்டப்பேரவையில் பேச வேண்டும்.
தமிழக வெற்றி கழக உறுப்பினர்களும் தங்கள் தொகுதி பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் நேரு, “முதல்-அமைச்சருக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று கூறுவதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், மற்ற முதல்-அமைச்சர்களைப் போல் எங்கள் முதல்-அமைச்சர் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் புகழ்ச்சி பிடிக்காது. தன்னை சட்டமன்ற உறுப்பினர்கள் புகழ்ந்து பேச வேண்டாம் என்று பேரவையிலேயே எழுந்து நின்று கூறியவர் மு.க.ஸ்டாலின்” என்றார்.