பிரதமரின் நிவாரண நிதி இருப்பு ரூ.8,452 கோடியாக அதிகரிப்பு
கொரோனா பரவல் காலத்தில் ஏற்பட்ட பொது சுகாதார நெருக்கடி, இயற்கை பேரிடர்கள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில், 'பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி (பி.எம். கேர்ஸ்)' என்ற பெயரில் பொதுத் தொண்டு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை 2020 மார்ச் 27-ஆம் தேதி டெல்லியில் பதிவு செய்யப்பட்டது.இந்த நிதியத்தின் தலைவராக பிரதமர் செயல்பட்டு வருகிறார். மேலும், பாதுகாப்பு, உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்கள் பதவிவழி அறங்காவலர்களாக உள்ளனர்.தற்போது, 2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கான தணிக்கை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2023-24 நிதியாண்டில் வட்டி மற்றும் பிற வரவுகள் உள்ளிட்ட மொத்த இருப்புத் தொகை ரூ.7,188.63 கோடியாக இருந்தது.இந்தத் தொகை, 2025 மார்ச் 31 நிலவரப்படி 2024-25 நிதியாண்டில் ரூ.8,452.94 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் வட்டி வருவாய் மட்டும் ரூ.469.37 கோடியாக பதிவாகியுள்ளது.அதே நேரத்தில், நன்கொடைகளின் அளவு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது.
2023-24 நிதியாண்டில் உள்நாட்டு நன்கொடைகள் ரூ.681.81 கோடியாக இருந்த நிலையில், 2024-25-ல் அது ரூ.479.04 கோடியாகச் சரிந்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நன்கொடையும் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில் ரூ.1.13 கோடியாக இருந்த வெளிநாட்டு நன்கொடை, 2024-25 நிதியாண்டில் ரூ.92.82 லட்சமாக பதிவாகியுள்ளது.செலவினங்களைப் பொறுத்தவரை, 2024-25 நிதியாண்டில் குழந்தைகள் நலத் திட்டத்துக்காக ரூ.87.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதே திட்டத்துக்காக 2023-24-ல் ரூ.15.37 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.அனைத்து வரவு-செலவுகளுக்குப் பிறகு, 2024-25 நிதியாண்டின் இறுதி இருப்புத் தொகை ரூ.8,452 கோடியே 6 லட்சத்து 70 ஆயிரத்து 758 ஆக உள்ளது.மேலும், நிவாரண நிதியின் 93 சதவீதம் நிலையான வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 2024-25 நிதியாண்டில் கணிசமான அளவில் வட்டி வருவாய் கிடைத்துள்ளதாகவும் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.