திமுக முன்னாள் அமைச்சர் பேச்சால் சிரித்த விஜய்: சட்டசபையில் சுவாரசியமான விவாதம்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கடந்த ஆட்சியில் ரூ.309 கோடி செலவில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார்.மேலும், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திரைக்கதை, வசனம் பேசுவதாக விமர்சித்த அமைச்சர் ரமேஷ், கடந்த ஆட்சியில் விவசாயிகள் நெல்லை சேமித்து வைக்க இடமின்றி சிரமப்பட்டதாக கூறினார். நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்திருந்ததாகவும், கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்து சென்ற விவசாயி குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.இதனைத் தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "தமிழக வெற்றிக் கழகம் எப்படி ஆட்சிக்கு வந்தது என சாமி அமைச்சரை பார்த்தாலே தெரிகிறது" என்று கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை 'சாமி அமைச்சர்' என அவர் குறிப்பிட்டதை கேட்ட விஜய், அவையில் சிரித்தார்.தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தற்போது எவ்வாறு பிரசாரம் செய்யப்படுகிறது என்பது தெரிகிறது என்றும், அமைச்சர் பேசும் விதம் உண்மையா, பொய்யா என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு தொழில்நுட்பமாக இருப்பதாகவும் விமர்சித்தார்.மேலும், தவெகவினரை குறிப்பிட்டு, நீங்கள் அனைவரும் படங்களைப் பார்த்து வந்தவர்கள் என்றும், தாங்களும் அதிமுகவினரும் கொள்கைகளைப் படித்து, களத்தில் போராடி வந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.திமுக ஆட்சியில் நடிப்பு கிடையாது, நடவடிக்கை மட்டுமே இருந்ததாக தெரிவித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது தெரியும் என்றும் குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், அந்த 'டெக்னிக்'கை 10 நிமிடங்களுக்கு முன்புதான் அண்ணன் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டதாக நகைச்சுவையாக கூறினார். இதனால் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.