சிபிஐ, வருமான வரி வழக்கு குறித்து உதயநிதிக்கு அமைச்சர் ஆனந்த் பதில்
சட்டசபையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, தி.மு.க. உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், அமைச்சர்களாக இருந்த காலத்தில் தங்களுக்கு எப்போதும் ஒருவித பதற்றம் இருந்து வந்ததாக தெரிவித்தார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அல்லது மு.க.ஸ்டாலின், அமைச்சர்களை உடனடியாக தொடர்பு கொண்டு தொகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து விசாரிப்பார்கள் என்றும், இதனால் 5 ஆண்டுகளும் பரபரப்பாகவே இருந்ததாகவும் கூறினார். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் நிம்மதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் என்.ஆனந்த், சிறிய வாய்க்கால் பிரச்சினை என்றாலும் கூட, அது சரிசெய்யப்பட்டதா என்று முதல்-அமைச்சர் தங்களை தொடர்பு கொண்டு கேட்பார் என்றார். இதனால் தாங்கள் தினமும் பதற்றத்துடனேயே பணியாற்றுவதாகவும், சிறிய பிரச்சினையாக இருந்தாலும் அதை அச்சத்துடன்தான் அணுகுவதாகவும் தெரிவித்தார்.இந்த நிலையில், இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய தவெக எம்.எல்.ஏ. சுகுமார், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் கருத்தை விமர்சித்தார். தங்களிடம் எந்த தவறும் இல்லாததால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், தாங்கள் நிதானமாகவே இருப்பதாகவும் கூறினார். மேலும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலை சந்திக்க மக்களிடம் செல்லும்போதும் இதே நிதானத்துடன்தான் இருப்போம் என தெரிவித்தார்.அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேற்று தங்கள் கட்சி உறுப்பினர் கடந்த 5 ஆண்டுகளாக பதற்றத்துடன் இருந்ததாக கூறியதற்கு அமைச்சர் என்.ஆனந்த் பதிலளித்ததை சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு நாளும் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும், ஒவ்வொரு நிமிடமும் பதற்றத்துடனேயே இருப்பதாகவும் அமைச்சர் கூறியதாக குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், அந்த கருத்தை மீண்டும் கூற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், அமைச்சர் தரப்பிலும் சிபிஐ வழக்கும், வருமான வரி வழக்கும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் என்.ஆனந்த், தங்கள் மீது சிபிஐ வழக்கு இருப்பதாக கூறியது சரிதான் என்றார். ஆனால், தான் நேற்று குறிப்பிட்ட பதற்றம் என்பது வேறு காரணத்துக்காக என்று விளக்கம் அளித்தார். தங்கள் தொகுதிகளில் மக்கள் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுகிறதா என்பதை முதல்-அமைச்சர் தொடர்ந்து கேட்டறிவார் என்பதையே தான் கூறியதாகவும், தங்களை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது பயமுறுத்தும் நோக்கத்திலோ அந்த கருத்தை தெரிவிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.மேலும், தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது முதல்-அமைச்சரிடம் இருந்து அழைப்பு வரும் என எதிர்பார்ப்பார்கள் என்றும் அமைச்சர் கூறினார். ஆனால், தற்போது முதல்-அமைச்சரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே ஒருவித பயம் ஏற்படுகிறது என்றும், தொகுதியில் சிறிய பிரச்சினை இருந்தாலும் அதை ஏன் சரிசெய்யவில்லை என்று முதல்-அமைச்சர் கேட்பார் என்றும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தங்களது சட்டமன்ற உறுப்பினரும் இதே கருத்தின் அடிப்படையில்தான் பேசியதாக விளக்கம் அளித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.