சாலை வசசாலை வசதி இன்றி அவதிப்படும் மக்கள்: 1 கி.மீ. தொலைவு வரை தொட்டிலில் நோயாளிகளை சுமந்து செல்லும் நிலைதி இல்லாததால் தொட்டில் கட்டி நோயாளிகளை 1 கி.மீ. தூரம் சுமந்து செல்லும் மக்கள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட இடுகொரை அருள்நகர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அன்றாட வாழ்க்கையே சவாலாக மாறியுள்ளது.கோத்தகிரியில் இருந்து இடுகொரை ஹட்டி வரை தார் சாலை வசதி உள்ளது. ஆனால், அங்கிருந்து இடுகொரை அருள்நகரை அடைய சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட 6 அடி அகல கான்கிரீட் நடைபாதையே ஒரே வழியாக உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பு செய்யப்படாததால் அந்த நடைபாதை சேதமடைந்து, தற்போது ஒற்றையடிப் பாதையாக மாறியுள்ளது.இதன் காரணமாக கிராமத்தில் யாருக்காவது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அவர்களை நேரடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. அதனால், கிராம மக்கள் நோயாளிகளை தொட்டிலில் கட்டி தோளில் சுமந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடுகொரை ஹட்டிக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர்.தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதி வழியாக இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதால், வனவிலங்குகள் தாக்கும் அபாயமும் நிலவுகிறது. எனவே, பழுதடைந்த நடைபாதையை அகலப்படுத்தி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இடுகொரை அருள்நகரைச் சேர்ந்த 53 வயதான ஞானபிரகாஷுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து கிராம இளைஞர்கள் அவரை தொட்டிலில் கட்டி தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அதே முறையில் வீட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர், சிகிச்சை பலனின்றி ஞானபிரகாஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சாலை வசதி இல்லாததால் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் ஒரு கிலோமீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவித்தனர். மேலும், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மற்றும் வனவிலங்கு தாக்குதலில் காயமடைந்தவர்களை தொட்டிலில் சுமந்து செல்ல வேண்டிய நிலை தொடர்வதால், சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.எனவே, கிராமத்திற்கு 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நேரடியாக வந்து செல்லும் வகையில் தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.