Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 21 ஆகஸ்ட் 2026 | 5 ஆவணி பராபவ வருடம்

சபாநாயகருக்கு வாழ்த்தும்... சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தலும்... சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள்

சபாநாயகருக்கு வாழ்த்தும்... சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தலும்... சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள்
தமிழ்நாடு சட்டசபையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி மற்றும் இந்து சமய அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, பேரவையை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சிறப்பாக வழிநடத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அதிக நேரம் பேச வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது அவற்றை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாகவும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். எதிர்க்கட்சியினரைவிட ஆளும் கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள் அதிக அளவில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு வியக்கும் வகையில் பதிலளிப்பதாகவும், தற்போது சட்டசபையில் பாடல்கள் பாடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இது சட்டசபையா அல்லது ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியா என்ற சந்தேகம் ஏற்படுவதாக விமர்சித்தார். இவ்வாறான பேச்சுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினாலும், அவை சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆகப் பரவி வருவதால், நீக்குவதன் நோக்கம் பயனற்றதாகிவிடுகிறது என்றும் தெரிவித்தார்.முதல்-அமைச்சர் விஜய் தனது மேசையில் ஒரு கோப்பு இருப்பதாகவும், அதைத் திறந்து பார்க்கும்படி வற்புறுத்த வேண்டாம் என்றும் கூறியிருந்ததை குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், அந்தக் கோப்பைத் திறந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நடவடிக்கை எடுப்பதில் ஏன் தாமதம் செய்யப்படுகிறது, நல்ல நேரம் பார்த்தோ அல்லது ஜோதிடர் கூறிய பிறகோ கோப்பைத் திறக்க வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நடவடிக்கை எடுப்பேன் என்ற மிரட்டல்களுக்கு தாங்கள் அஞ்சப்போவதில்லை என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மிசா காலத்தையே எதிர்கொண்ட தி.மு.க.வை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளதாகக் கூறினார். அனைத்து துறைகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், தவறுகள் இருந்தால் அவற்றுக்கு ஆதாரங்களுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே முதல்-அமைச்சரின் கருத்து என்றும் விளக்கமளித்தார்.மேலும், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடுவது தொடர்பாக தி.மு.க.வையும் அமைச்சர் விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் யாருடைய பெயரை கூறி பதவியேற்றனர் என்றும் கேள்வி எழுப்பினார்.2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவதாக தி.மு.க. கூறியிருந்த நிலையில், அதை ஏன் செயல்படுத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சட்டசபை நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பும் துணிச்சல் தி.மு.க.வுக்கு இதுவரை இல்லை என்றும், தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் நேரலை செய்யப்படுவதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.இதற்கு பதிலடி அளித்த உதயநிதி ஸ்டாலின், சட்டசபையில் கேள்வி நேரத்தை முதன்முதலில் நேரலையில் ஒளிபரப்பியது தி.மு.க.
Advertisement
ஆட்சிதான் என்று கூறினார். இதனால் அவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சட்டசபையில் தாங்கள் பேசிய சில கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், அவை ஏற்கனவே நேரலையில் வெளியாகிவிட்டதாக தெரிவித்தார். அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகி வருவதாகவும் கூறினார்.அதேவேளை, சட்டசபை அலுவல் நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்புவதை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், அது வரவேற்கத்தக்க முயற்சி என்றும் அவர் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், எந்தத் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அவை ஆதாரங்களுடன் இருக்க வேண்டும் என்றார். ஆதாரமற்ற கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது சட்டசபையின் நடைமுறையாகும் என்றும் தெரிவித்தார்.எதிர்காலத்திலும் அவையின் மாண்பை பாதுகாக்கும் வகையில், தேவையான கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் உரிமையை சபாநாயகர் பயன்படுத்துவார் என்றும் கூறினார். ஆதாரங்கள் இல்லாமல் பேசுவதைத் தவிர்த்து, இரு தரப்பினரும் ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்பதே தன்னுடையதும் மக்களுடையதும் விருப்பம் என தெரிவித்தார்.சட்டசபை என்பது எந்த கருத்தையும் ஆதாரமின்றி கூறிவிட்டு செல்லும் இடம் அல்ல என்றும், உறுப்பினர்கள் பேசும்போது அவையின் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றும் சபாநாயகர் அறிவுறுத்தினார். எல்லா பேச்சுகளையும் நீக்குவது தனது நோக்கம் இல்லை என்றாலும், அவைக்கு பயனளிக்காததும், பண்பாட்டுக்கு ஏற்றதல்லாததும், அவையின் மாண்பைக் குறைக்கும் வகையிலானதுமான கருத்துகள் இருந்தால் அவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவருக்கு கேபினெட் அந்தஸ்து உள்ள நிலையில், அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அமைச்சர்கள் எழுந்து பேசுவது எந்த வகையில் சட்டசபை மரபாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.எதிர்க்கட்சித் தலைவர் பலமுறை எழுந்து அமர வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், மற்ற உறுப்பினர்களை பேச அழைப்பது நியாயமா என்றும் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஓ.பன்னீர்செல்வம் கூறுவது தனக்கு புரிவதாக தெரிவித்தார். ஆனால், முதல்-அமைச்சர் குறித்து பேசப்படும் நேரத்தில் அமைச்சர் எழுந்து பதிலளிக்காமல் இருந்தால், அந்த அமைச்சர்கள் அவையில் அமர்ந்திருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று விளக்கம் அளித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு