சென்னை ஐஐடி வளாகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு: வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இணைந்து மேற்கொண்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இன்று சென்னை ஐஐடி வளாகத்தை நேரில் பார்வையிட்டார். அங்கு மின்சாரத் துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, இன்னோவேஷன் ஹப், தூய்மை எரிசக்தி ஆய்வகம், ஃப்ளோ பேட்டரி ஆய்வகம், பேட்டரி மறுசுழற்சிக்கான உயிரித் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் 1 மெகாவாட் திறன் கொண்ட பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார். மேலும் மின்சார சேமிப்பு தொழில்நுட்பங்கள், பேட்டரி மறுசுழற்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு மற்றும் மின் கட்டமைப்பு மேலாண்மை தொடர்பாக ஐஐடி ஆராய்ச்சியாளர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி பசுமை எரிசக்தி மாநிலமாக மாற்றும் நோக்கில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
* உலகத் தரத்தில் Battery Energy Storage System (BESS) மற்றும் பேட்டரி மறுசுழற்சி தொடர்பான விரிவான புதிய கொள்கை, சென்னை ஐஐடி நிபுணர்களின் ஒத்துழைப்புடன் விரைவில் வெளியிடப்படும்.
* மின்கட்டமைப்பின் தேவைகளை கருத்தில் கொண்டு, Load Flow ஆய்வின் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு வெளிப்படையான மற்றும் அறிவியல் அடிப்படையிலான அனுமதி நடைமுறை அமல்படுத்தப்படும்.
* நிலுவையில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்ட விண்ணப்பங்கள் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட பின்னர் விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
* வீட்டு மாடி சூரிய மின்சாரத் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில், பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய புதிய கொள்கை, எளிமையான அனுமதி முறை மற்றும் ஒருங்கிணைந்த செயலி அறிமுகப்படுத்தப்படும்.
இதன் மூலம் மானியம், மீட்டர் பொருத்துதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே தளத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
* அதிகரித்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை திறம்பட ஒருங்கிணைத்து, காலை மற்றும் மாலை நேர உச்ச மின் தேவையை சமாளிப்பதில் BESS தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.இந்த ஆய்வுப் பயணம், தமிழ்நாட்டில் தடையற்ற மின் விநியோகம், மேம்பட்ட மின் வலையமைப்பு, தூய்மையான எரிசக்தி பயன்பாடு மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் அரசின் உறுதியான முயற்சியை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இந்த நிகழ்வில் ஐஐடி பேராசிரியர்கள் சத்ய நாராயணன் சேஷாத்திரி, நிதின் முரளிதரன் மற்றும் மரபு சாரா எரிசக்தி தலைமைப் பொறியாளர் பி.ஜி. கலைவாணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.