கேரளாவில் பரபரப்பு: நடுரோட்டில் காரை நிறுத்தி தூங்கிய வாலிபர்
கேரள மாநிலம் கோட்டயம் அருகே சாலையின் நடுவே காரை நிறுத்திவிட்டு இளைஞர் ஒருவர் தூங்கிய சம்பவத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கோட்டயம் மாவட்டம் எட்டுமானூர்–அதிரம்புழா சாலையில் உள்ள அதிரம்புழா பள்ளி சந்திப்பு பகுதியில் ஜோபின் ஜானி என்ற இளைஞர் காரில் வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர், காரில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டபடி சென்றதாக கூறப்படுகிறது. திடீரென சாலையின் நடுப்பகுதியிலேயே காரை நிறுத்திய அவர், அதை ஓரமாகக்கூட நகர்த்தாமல் இருக்கையில் சாய்ந்து தூங்கிவிட்டார்.இதனால் பின்னால் வந்த அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அவருடைய காரை கடந்து செல்ல முடியாமல் சாலையிலேயே நின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.காருக்குள் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்த பொதுமக்கள், அருகில் சென்று பார்த்தபோது இளைஞர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் நீண்ட நேரம் காரை உலுக்கியும், கதவைத் தட்டியும் அவரை எழுப்பினர்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். காரை சோதனை செய்தபோது அதற்குள் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஜோபின் ஜானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.