காணாமல் போன பூனை: கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம்
ஈரோட்டில் காணாமல் போன செல்லப்பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என அதன் உரிமையாளரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் லாசர். இவரது மகள் ஆருத்ரா, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ‘ரோச்’ என்ற பெயருடைய செர்பியன் இன பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.
சமீபத்தில் ஆருத்ரா ஈரோடு வந்தபோது, தனது செல்லப்பூனையையும் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருந்த ரோச் திடீரென காணாமல் போனது. இதையடுத்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் பூனை கிடைக்கவில்லை.
இதனால் ஆருத்ரா மிகுந்த மனவேதனை அடைந்தார்.இதனைத் தொடர்ந்து ஜான் லாசர் சமூக வலைதளங்களில் பூனையை தேடும் அறிவிப்பை வெளியிட்டார். அதில், பூனையின் உரிமையாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனது அன்பான செல்லப்பிராணியை நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பதாகவும், பூனையை கண்டுபிடிக்க உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், ரோச்சை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.