உதவியாளர் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் நீண்டகால உதவியாளராக பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது உதவியாளராக பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.சென்னை மேயராக மு.க. ஸ்டாலின் பொறுப்பு வகித்த காலத்தில், ஹரிகிருஷ்ணன் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றியுள்ளார். பின்னர் அந்தப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அவர், நீண்ட காலமாக மு.க. ஸ்டாலினின் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.தனது பணிகளுக்கு துணையாக, நேரம் காலம் பார்க்காமல் அர்ப்பணிப்புடன் ஹரிகிருஷ்ணன் செயல்பட்ட நினைவுகள் தற்போது மனதில் வந்து துயரத்தை மேலும் அதிகரிப்பதாக மு.க.
ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த ஹரிகிருஷ்ணன், அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்.அன்பான குணம் கொண்ட ஹரிகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.