காவிரி துரோகத்தை மறைக்கத் தவெக அரசு நடத்தும் திசைதிருப்பல் நாடகமே எம்.பி.க்கள் கூட்டம் - திமுக
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்ததை மறைப்பதற்காகவே, தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தை தவெக அரசு நடத்துவதாக திமுக ஐ.டி. விங் குற்றம்சாட்டியுள்ளது.இதுதொடர்பாக திமுக ஐ.டி. விங் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:பாஜகவை எதிர்த்து பேச தயங்கியதால், கடந்த ஆண்டு திமுக ஏற்பாடு செய்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை விஜய் புறக்கணித்ததாக அந்தப் பதிவு தெரிவித்துள்ளது. அதேபோல், தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகளை முதலில் எதிர்த்து மாநாடுகளை நடத்தி, நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்றும், தற்போது உள்ள 7.18 சதவீத பிரதிநிதித்துவத்தில் எந்த மாற்றத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும் தமிழகத்தின் நிலைப்பாடு ஏற்கனவே அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையுடன் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திமுக ஐ.டி.
விங் தெரிவித்துள்ளது. அப்படியிருக்க, தற்போது எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸிடம் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு, டெல்டா விவசாயிகளின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே அவசரமாக தொகுதி மறுவரையறை தொடர்பான நடவடிக்கையை முதல்-அமைச்சர் மேற்கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழக எம்.பி.க்களுடன் இணைந்து மத்திய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்குவதற்கு தமிழக அரசு தயாரா என்றும் திமுக ஐ.டி. விங் கேள்வி எழுப்பியுள்ளது.விவசாயிகளின் உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு நடத்தப்படும் எந்தவொரு அரசியல் நாடகத்திலும் திமுக பங்கேற்காது என்றும், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த தங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.