'ஓலைச்சுவடிகள், செப்பேடுகளில் உள்ள திருமுறைகள் செயலி வடிவில் மாற்றம்' - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டு
சைவ சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் தருமபுர ஆதீனம் ஆற்றி வரும் பங்களிப்பு அளவிட முடியாதது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சேக்கிழார் ஆராய்ச்சி மையமும், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமும் இணைந்து 34-வது தெய்வச் சேக்கிழார் விழாவை கடந்த ஜூலை 30 முதல் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவாலயம் வெளியிட்ட தருமையாதீனத்தின் பன்னிரு திருமுறைகள் மற்றும் வென்றிமாலைக் கவிராயர் அருளிய திருச்செந்தூர் தலபுராணம் உரையுடன் வெளியிடப்பட்டன.இந்த நிகழ்வில், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் நூல்களை வெளியிட்டு சிறப்பித்தார். அதன் முதல் பிரதியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுக்கொண்டார்.பின்னர் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், ஓலைச்சுவடிகள் மற்றும் செப்பேடுகளில் பாதுகாக்கப்பட்டிருந்த திருமுறைகள், காலத்திற்கேற்ப தற்போது செயலி (அப்ளிகேஷன்) வடிவில் மக்களை சென்றடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
இன்றைய இளைஞர்களுக்கு பழமையான ஆவணங்களை நேரடியாக வாசிப்பது சிரமமாக இருக்கக்கூடும் என்பதால், செயலி மூலம் பன்னிரு திருமுறைகள் அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டிருப்பது பாராட்டத்தக்க முயற்சி என்றும் அதற்காக நன்றியைத் தெரிவித்தார்.மேலும், பிரதமர் தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாடு மற்றும் தமிழ் மரபுகளுக்கு பல்வேறு வகைகளில் மரியாதை செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஓதுவாமூர்த்திகளுக்கு முதன்முறையாக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதையும், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆதீனங்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி செங்கோலை நிறுவியதையும் அவர் எடுத்துரைத்தார்.தொடர்ந்து பேசிய அவர், தருமபுர ஆதீனம் சைவ சமய வளர்ச்சிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்ந்து சிறப்பான சேவையாற்றி வருவதாகவும், தனது பாரம்பரியத்தைப் பேணியபடி தமிழ்நாடு, தமிழ் மற்றும் சைவத்திற்கு தொடர்ந்து பங்களித்து வருவதாகவும் தெரிவித்தார். அந்த ஆதீனத்தின் அர்ப்பணிப்பான பணிக்கு தனது மரியாதையையும் அவர் பதிவு செய்தார்.