கர்நாடகா சென்று தண்ணீரை தூக்கிட்டு வரப்போறீங்களா? – விஜய் பயணத்திற்கு பெ. சண்முகம் கடும் எதிர்ப்பு
கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா செல்லவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா சென்று காவிரி நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பெ. சண்முகம், அந்தப் பயணத்தால் தமிழகத்திற்கு என்ன பயன் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினார்."கர்நாடகாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினாலும், அங்கிருந்து தண்ணீரை கொண்டு வர முடியுமா? காவிரி மேலாண்மை ஆணையத்திடம் 3,500 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. மேலும், மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக உள்ளது," என்று அவர் கூறினார்.மேகதாது அணை அமைப்பதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்ற தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த சூழலில் கர்நாடகா செல்லும் முதல்வர், அணை கட்ட அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அங்கு வலியுறுத்தப் போகிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.எனவே, இந்த பயணத்தை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்வதாக பெ.
சண்முகம் தெரிவித்தார்.மேலும், பேச்சுவார்த்தையின் போது கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று தெரிவித்தால், அதை டெல்டா மாவட்ட விவசாயிகள் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்பதையும் முதல்வர் சிந்திக்க வேண்டும் என்றார். தற்போது டெல்டா பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அப்பகுதி பாலைவனமாக மாறிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என்றும், இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக இருக்காது என்றும் அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.