மதுரையில் வைகை ஆற்றுப் பகுதியில் கார்கள் நிறுத்தப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் எழுந்ததைத் தொடர்ந்து நேற்று அங்கிருந்து கார்கள் அகற்றப்பட்ட நிலையில், இன்றும் அதே பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுக் காணும் இந்த விழா, நகரின் பாரம்பரியத்தையும் பெருமையையும் பறைசாற்றுகிறது. சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களின் தொடர்பையும் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகவும் இது விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க வைகை ஆற்றுப் பகுதியில் தற்போது கார்கள் நிறுத்தப்பட்டு, வாகன நிறுத்துமிடம் போலப் பயன்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
மதுரையின் முக்கிய வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு ஷாப்பிங் செய்யவும், வியாபாரப் பணிகளுக்காகவும் வருபவர்கள் தங்களது கார்களை ஆற்றுப் பகுதியில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். பல மணி நேரம் கார்களை அங்கேயே நிறுத்திவிட்டு, பின்னர் வந்து எடுத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. நேற்று புகார் எழுந்ததையடுத்து கார்கள் அகற்றப்பட்ட போதிலும், இன்றும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வைகை ஆற்றுப் பகுதியை வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.