தாம்பரம் அருகே படப்பை பகுதியில், திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அவரது கணவரை மணிமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள எச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (27). இவர், படப்பை அருகே அழகூர் பகுதியைச் சேர்ந்த தீபக் (27) என்பவரைக் காதலித்து வந்தார். இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு, அழகூரில் உள்ள தீபக்கின் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். இந்நிலையில், ராஜேஸ்வரியின் செல்போன் பயன்பாடு மற்றும் அவர் யாருடன் பேசுகிறார் என்பது குறித்து தீபக் தொடர்ந்து கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது செல்போனை அடிக்கடி சோதனை செய்ததுடன், ராஜேஸ்வரி மீது சந்தேகங்களையும் எழுப்பி, கடுமையான வார்த்தைகளால் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, கடந்த சில வாரங்களாகத் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
Advertisement
இத்தகைய சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற மணிமங்கலம் போலீசார், ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், ராஜேஸ்வரியின் செல்போன் உரையாடல்கள் மற்றும் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறுகள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் தீபக் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் மனரீதியான கொடுமை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இதற்கிடையே, ராஜேஸ்வரிக்கு வரதட்சணை தொடர்பாக ஏதேனும் கொடுமைகள் இழைக்கப்பட்டனவா என்பது குறித்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி நான்கு மாதங்களிலேயே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.