விமான நிலையமும் வேண்டும்.. விவசாய நிலமும் வேண்டும் - அமைச்சர் ராஜ்மோகன்
தமிழ் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரின் 143-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:
பரந்தூர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட கம்பன் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வழியாகவே கடைமடை ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் அப்பகுதிக்கு ஏராளமான பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, கம்பன் கால்வாய் தொல்லியல் முக்கியத்துவம் மட்டுமின்றி, முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பாகவும் விளங்குகிறது.இந்த சூழலுக்கு மத்தியில் பரந்தூர் மக்கள் ஆயிரம் நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்தப் பகுதி மக்களின் நடமாட்டம் கூட ஆதார் அட்டை காண்பித்த பிறகே அனுமதிக்கப்படும் நிலை இருந்தது.
தற்போது அந்த நிலை மாறியுள்ளது.விவசாயிகளின் நிலத்தை அவர்களிடமிருந்து பறிப்பது என்பது குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பதைப் போன்றது. நாட்டின் வளர்ச்சிக்கு விமான நிலையம் தேவை; அதே நேரத்தில் விவசாய நிலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இதைத்தான் முதல்-அமைச்சர் விஜய் செயல்படுத்தியுள்ளார்.பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதற்கு விவசாயிகள் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.விமான நிலையத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அந்த நிலங்களை மீண்டும் வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. மேலும், அந்த நிலங்களில் மீண்டும் விவசாயம் மேற்கொள்ள முடியுமா என்பதையும் சட்ட ஆலோசனைக்குப் பிறகே முடிவு செய்ய முடியும். இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் விவசாயிகளுக்கு சாதகமான முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.