தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதா; கவர்னர் ஒப்புதல்
# தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை: மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்த மசோதாவுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் காலியிடங்களில் 20 சதவீதத்தை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க கடந்த 2010-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, ஒருவர் ஏற்கனவே அரசு பணியில் உள்ளாரா என்பதை கருத்தில் கொள்ளாமல் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் தமிழ்வழியில் படித்தவர்கள் என்ற அடிப்படையில் இந்த முன்னுரிமையை கோர தகுதியில்லை என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனை தெளிவுபடுத்தும் வகையிலும், 2010-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதிக்கு பிறகு தமிழ்வழியில் படித்தவர்கள் முன்னுரிமை அடிப்படையில் பெற்ற பணிநியமனங்கள் செல்லும் என்பதை உறுதி செய்யும் வகையிலும், இனி புதிதாக பணியில் சேருபவர்களுக்கு மட்டும் இந்த சலுகையை வழங்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.தற்போது இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதன் மூலம் தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இந்த திருத்தச் சட்டம் இனி புதிதாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு முன்னுரிமை?
1-ம் வகுப்பு முதல் அரசு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரையிலான முழு கல்வியையும் தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு பயின்றவர்களுக்கே இந்த முன்னுரிமை கிடைக்கும். வேறு மொழியை பயிற்றுமொழியாகக் கொண்டு படித்து, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் இதற்கு தகுதியற்றவர்கள். 1-ம் வகுப்பில் சேராமல், வயது அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8-ம் வகுப்புகளில் நேரடியாக சேர்ந்து, தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு படித்து தேர்ச்சி பெற்றவர்களும் முன்னுரிமைக்கு தகுதியுடையவர்கள். பிற மாநிலங்களில் தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு படித்து, பின்னர் தமிழகத்தில் சேர்ந்த வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களும் இந்தச் சலுகையை பெறலாம். அரசு பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரையிலான படிப்பை மேற்கொண்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலிருந்தும், தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை சம்பந்தப்பட்டவர்கள் பெற வேண்டும்.