ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியும், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்படுபவருமான வெள்ளத்துரை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, கடந்த 2024-ம் ஆண்டு காவல் துறை பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தனது காவல் பணிக்காலத்தில் பல்வேறு முக்கிய என்கவுன்ட்டர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இவர் பரவலாக அறியப்பட்டார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட வெள்ளத்துரை, 1,048 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதற்கிடையே, அக்கட்சியின் தலைவர் சக்கரவர்த்தி, சசிகலாவை கட்சியில் இருந்து அண்மையில் நீக்கியிருந்தார். இந்தச் சூழலில், வெள்ளத்துரை இன்று அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுகுறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், எடப்பாடி பழனிசாமியை எம்.ஜி.ஆர். மாளிகையில் நேரில் சந்தித்த ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
காவல் துறையில் வெள்ளத்துரையின் பின்னணி 1997-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வெள்ளத்துரை தனது பணியைத் தொடங்கினார். 1998-ம் ஆண்டு திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, கோ.சி. ஜான் என்ற ரவுடி காவல்துறையினரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்ற சம்பவத்தில் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, 2003-ம் ஆண்டு சென்னை அயோத்தி குப்பம் வீரமணி என்கவுன்ட்டர் நடவடிக்கையிலும், 2004-ம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் நடவடிக்கையிலும் சிறப்பு அதிரடிப்படையுடன் இணைந்து செயல்பட்டார். இதுவரை 12-க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, திருப்பாச்சேத்தியில் நடைபெற்ற காவல் மரண வழக்கு தொடர்பாக, அப்போது டிஎஸ்பியாகப் பணியாற்றிய வெள்ளத்துரை, 2024-ம் ஆண்டு ஓய்வுபெறுவதற்கு முந்தைய நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்குகளைப் பெற்ற வெள்ளத்துரை தற்போது அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.