குற்றாலம் அருவியில் குளிக்கச் சென்ற அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வங்கி மேலாளரை காரில் கடத்தி, மிரட்டி ரூ.7 லட்சம் வரை பணம் பறித்த சம்பவத்தில் இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (42). இவர் அப்பகுதியில் உள்ள அரசு வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். செல்போனில் ‘கிரைண்டர்’ செயலியைப் பயன்படுத்தி வந்த இவர், சம்பவத்தன்று குற்றாலம் அருவியில் குளிப்பதற்காகச் சென்றிருந்தார். அப்போது அந்தச் செயலி மூலம் அறிமுகமான மர்ம நபர் ஒருவர், பொன்னுச்சாமியுடன் பேசியுள்ளார். பின்னர், கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் உள்ள மிலிட்டரி கேண்டீன் பகுதிக்கு வருமாறு அவரை அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற பொன்னுச்சாமியை, அந்த நபர் ஓட்டுநருடன் காரில் வந்து சந்தித்துள்ளார். அப்போது திடீரென பொன்னுச்சாமியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு கடத்திச் சென்றுள்ளார். தென்காசி சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, கடையநல்லூர் இடைகால் பேருந்து நிறுத்தம் அருகே மேலும் நான்கு பேர் காரில் ஏறியுள்ளனர். பின்னர், காருக்குள்ளேயே பொன்னுச்சாமியை மாறி மாறித் தாக்கி மிரட்டிய அந்தக் கும்பல், அவரிடம் இருந்த ரூ.1,000 ரொக்கம், செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு உள்ளிட்ட பொருட்களைப் பறித்துள்ளது. தொடர்ந்து, பொன்னுச்சாமியை மிரட்டி அவரது வங்கிக் கணக்குகளுக்கான கடவுச்சொற்களைப் பெற்றுள்ளனர். பின்னர், காரைச் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, அருகிலிருந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்று அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளனர்.
Advertisement
இதன்பிறகும் தொடர்ந்து பணம் பறிக்கும் நோக்கில், அவரிடம் பிற வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்துள்ளனர். இதையடுத்து, செல்போன் மூலம் இணையவழிப் பணப் பரிமாற்றம் செய்து, விருதுநகர் கிளை வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மற்றும் ரூ.4 லட்சம் எனவும், அருப்புக்கோட்டை கிளை வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் எனவும் மொத்தம் ரூ.7 லட்சம் வரை பறித்ததாகக் கூறப்படுகிறது. பணத்தைப் பெறும் நடவடிக்கைகள் முடியும் வரை பொன்னுச்சாமியை காரிலேயே அழைத்துச் சென்ற அந்தக் கும்பல், ராஜபாளையம் வரை சென்றுள்ளது. பின்னர், இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, பொன்னுச்சாமியை கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பணத்தை இழந்த பொன்னுச்சாமி, இதுகுறித்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நெல்லை சங்கர் நகர் வடக்கு சிதம்பர நகரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் நாகராஜன் (28) மற்றும் மேலப்பாளையம் சிவராஜபுரத்தைச் சேர்ந்த முத்துசெல்வன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு பேரைத் தேடி வருகின்றனர்.