விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தில் உள்ள கார் மெக்கானிக் கடையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பழுதுபார்ப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த சொகுசு எஸ்யுவி கார் உட்பட 3 கார்கள் தீக்கிரையாகின. ஜானகிபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இயங்கி வரும் கார் மெக்கானிக் கடையில், வழக்கம்போல் பல்வேறு வாகனங்கள் பழுதுபார்க்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அங்கிருந்த கார் ஒன்றிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்திலேயே தீ பரவி, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீயின் வேகம் அதிகரித்ததால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற கார்களுக்கும் தீ பரவியது. இதில், ஒரு சொகுசு எஸ்யுவி கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
Advertisement
மேலும் இரண்டு கார்களும் தீயில் சிக்கி பலத்த சேதமடைந்தன. தீ விபத்து ஏற்பட்டபோது கடையில் ஊழியர்கள் யாரும் இல்லாததால், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் தாலுகா போலீசார், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மெக்கானிக் கடையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.