காவல் நிலையங்களே மரணக் கூடங்களாக மாறுகின்றனவா? – டிடிவி தினகரன் கேள்வி
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் விசாரணைக்காக மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கேயே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில் ஆறுக்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், உயிரிழந்தவரின் உறவினர்கள் மரணத்திற்கான உண்மையான காரணத்தைத் தெரிவிக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள தவெக அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை செயல்படுவதாக தினகரன் விமர்சித்துள்ளார். இந்நிலையில், லாரி ஓட்டுநரின் சந்தேக மரணம் குறித்த செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளேயே வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதும், செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதும் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.