ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு தரமான வெங்காயத்தை குறைந்த விலையில் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகியவற்றின் மூலம், முதற்கட்டமாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலிருந்து 1,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்துள்ளது.அதன்படி, செப்டம்பர் 3, 2026 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.நகர்ப்புறங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பண்ணை பசுமைக் கடைகள் உள்ளிட்ட மொத்தம் 8,914 விற்பனை நிலையங்கள் மூலம் வெங்காயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னையில் இன்று (03.09.2026) நடைபெற்றது.