ரூ.113 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்கள்; முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
தமிழகம் முழுவதும் ரூ.113 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன மருத்துவ வசதிகளை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்டத்தின் பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைகள், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனை, விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் மற்றும் வளவனூர் அரசு மருத்துவமனைகளில் புதிதாக அமைக்கப்பட்ட கூடுதல் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட கதிரியக்க சிகிச்சை மையம், 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 துணை சுகாதார நிலையங்கள், 2 வட்டார பொது சுகாதார அலகுகள் ஆகியவையும் திறக்கப்பட்டன. அதே நேரத்தில், பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாடும் தொடங்கி வைக்கப்பட்டது. அறந்தாங்கி மருத்துவமனை தரம் உயர்வு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை, 174 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வந்த நிலையில், ரூ.46 கோடி செலவில் தரை மற்றும் 6 தளங்களைக் கொண்ட புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.2.81 கோடி மதிப்பில் நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு, மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தில் வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை, இசிஜி, எக்கோ, எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன், அறுவைச் சிகிச்சை அரங்குகள், இரத்த சுத்திகரிப்பு பிரிவு, காது-மூக்கு-தொண்டை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, 'ஒன் ஸ்டாப் சென்டர்', உள்நோயாளர் பிரிவுகள், இரத்த வங்கி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டப் பிரிவு, விஷமுறிவு சிகிச்சைப் பிரிவு, நிர்வாக அலுவலகம் மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிவகாசி அரசு மருத்துவமனை விரிவாக்கம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.28.80 கோடி செலவில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தாய்-சேய் நலக் கட்டடம் ஒருங்கிணைந்த புதிய வளாகமாக கட்டப்பட்டுள்ளது. மேலும், ரூ.3.85 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டடத்தில் மைய ஆக்சிஜன் வசதி, சிசிடிவி, லேன் இணைப்புகள், தீயணைப்பு பாதுகாப்பு அமைப்புகள், மின்தூக்கி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 50 தீவிர சிகிச்சைப் படுக்கைகளும், 100 மகப்பேறு படுக்கைகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டு, மருத்துவமனையின் மொத்த படுக்கை எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. பிற மருத்துவமனைகளில் புதிய வசதிகள் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் ரூ.1.75 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், ஆய்வகம், பல் மருத்துவம், பெண்கள் மற்றும் ஆண்கள் மருத்துவ ஆலோசனை பிரிவுகள், காத்திருப்பு அறை உள்ளிட்ட பல வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.