ரூ.113 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்கள்; முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ரூ.113 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்கள்; முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

ரூ.113 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்கள்; முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் ரூ.113 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன மருத்துவ வசதிகளை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்டத்தின் பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைகள், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனை, விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் மற்றும் வளவனூர் அரசு மருத்துவமனைகளில் புதிதாக அமைக்கப்பட்ட கூடுதல் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட கதிரியக்க சிகிச்சை மையம், 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 துணை சுகாதார நிலையங்கள், 2 வட்டார பொது சுகாதார அலகுகள் ஆகியவையும் திறக்கப்பட்டன. அதே நேரத்தில், பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாடும் தொடங்கி வைக்கப்பட்டது. அறந்தாங்கி மருத்துவமனை தரம் உயர்வு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை, 174 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வந்த நிலையில், ரூ.46 கோடி செலவில் தரை மற்றும் 6 தளங்களைக் கொண்ட புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.2.81 கோடி மதிப்பில் நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு, மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தில் வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை, இசிஜி, எக்கோ, எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன், அறுவைச் சிகிச்சை அரங்குகள், இரத்த சுத்திகரிப்பு பிரிவு, காது-மூக்கு-தொண்டை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, 'ஒன் ஸ்டாப் சென்டர்', உள்நோயாளர் பிரிவுகள், இரத்த வங்கி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டப் பிரிவு, விஷமுறிவு சிகிச்சைப் பிரிவு, நிர்வாக அலுவலகம் மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிவகாசி அரசு மருத்துவமனை விரிவாக்கம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.28.80 கோடி செலவில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தாய்-சேய் நலக் கட்டடம் ஒருங்கிணைந்த புதிய வளாகமாக கட்டப்பட்டுள்ளது. மேலும், ரூ.3.85 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டடத்தில் மைய ஆக்சிஜன் வசதி, சிசிடிவி, லேன் இணைப்புகள், தீயணைப்பு பாதுகாப்பு அமைப்புகள், மின்தூக்கி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 50 தீவிர சிகிச்சைப் படுக்கைகளும், 100 மகப்பேறு படுக்கைகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டு, மருத்துவமனையின் மொத்த படுக்கை எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. பிற மருத்துவமனைகளில் புதிய வசதிகள் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் ரூ.1.75 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், ஆய்வகம், பல் மருத்துவம், பெண்கள் மற்றும் ஆண்கள் மருத்துவ ஆலோசனை பிரிவுகள், காத்திருப்பு அறை உள்ளிட்ட பல வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.1.05 கோடி செலவில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு, ஆய்வகம், பல் மருத்துவப் பிரிவு, நுண்கதிர் பிரிவு, உள்நோயாளர் அறை, மருத்துவக் கிடங்கு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் நுண்கதிர் அறை, ஆய்வகம், மருத்துவக் காப்பீட்டு திட்டப் பிரிவு, மருந்துக் கிடங்கு, அறுவைச் சிகிச்சை அரங்கு மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அரசு மருத்துவமனையிலும் ரூ.3.50 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் அவசர சிகிச்சை, நுண்கதிர் பிரிவு, கட்டு கட்டும் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளர் பிரிவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், வளவனூர் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி செலவில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தில் வெளிநோயாளர் பிரிவு, ஆய்வகம், குடும்பநலப் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கு, உள்நோயாளர் பிரிவு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் புதிய புற்றுநோய் சிகிச்சை மையம் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.6.78 கோடி செலவில் புதிய கதிரியக்க சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.4 கோடி மதிப்பில் 20 படுக்கைகள் கொண்ட கதிர்வீச்சு பங்கர் கட்டடமும், ரூ.2.78 கோடி மதிப்பில் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரமும் நிறுவப்பட்டுள்ளன.உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் மூலம் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த புற்றுநோயாளிகள், சிகிச்சைக்காக திருவனந்தபுரம், மதுரை, திருநெல்வேலி, சென்னை போன்ற தொலைதூர நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுகாதார நிலையங்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககத்தின் மூலம் ரூ.11.45 கோடி செலவில் கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் 12 கிராம மற்றும் நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள், சேலம் மாவட்டத்தில் 2 வட்டார பொது சுகாதார அலகுகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்பு இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தாரேஸ் அகமது உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.மேலும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து காணொலி வாயிலாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ், மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அரசு அதிகாரிகளும் நிகழ்ச்சியில் இணைந்தனர்.