ராவணன் முழுமையான தீயவன் அல்ல என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்த கருத்து, சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி, அக்டோபர் 27-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி, இந்தியக் கலாசாரத்தையும் இதிகாசங்களையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வாய்ப்பாக இந்தப் படம் அமையும் என்று குறிப்பிட்டார். மேலும், ராமாயணத்தில் இருந்து ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மனிதர்களிடம் காணப்படும் நல்ல மற்றும் தீய குணங்களைத் தாங்களே ஆராய்ந்து, தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்வது அவசியம் என வலியுறுத்திய அவர், “ராவணன் முழுமையாகத் தீயவன் அல்ல. நமக்குள் இருக்கும் ராவணனை அடையாளம் கண்டு, காலப்போக்கில் நம்மை நாமே மாற்றிக்கொள்வது முக்கியம்” என்று கூறினார்.
Advertisement
சாய் பல்லவியின் இந்தப் பேச்சு இணையத்தில் பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர் அவரது கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். ராவணனைப் போற்றுவது சாய் பல்லவியின் நோக்கமல்ல என்றும், ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருக்கும் எதிர்மறையான குணங்களை அடையாளம் கண்டு அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்தியுள்ளார் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிப்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராவணன் குறித்த அவரது கருத்தும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தப் படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் இரண்டாம் பாகத்தை 2027-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.