“ராமாயணா” படம் இந்தியக் கதையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் முயற்சி: நடிகர் யாஷ்
இந்தியாவின் பாரம்பரியக் கதையை சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே ‘ராமாயணா’ திரைப்படத்தின் நோக்கம் என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார். இப்படத்தை உலகளவில் வெளியிடுவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார். வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை மையமாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இந்தியத் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். மேலும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாகத் தயாராகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். முன்னதாக வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், சமீபத்தில் வெளியான புதிய டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. புதிய டிரெய்லரில் ராமருக்கும் ராவணனுக்கும் இடையிலான மோதல் பிரம்மாண்டமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர், தீமையை ஒழித்து ராவணனை வீழ்த்துவதாக உறுதியேற்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதேவேளையில், படத்தின் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் எதிர்பார்த்த தரத்தில் இல்லை எனச் சிலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், ‘ராமாயணா’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது.