ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்
பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கு எதிராக முதன்முதலில் குரல் எழுப்பிய மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், அந்த எதிர்ப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடங்கிய இந்த எதிர்ப்புக்கு தற்போது நாடு முழுவதும் ஆதரவு கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் ஜனநாயக முறையில் நடத்தி வரும் அறப்போராட்டங்களை மத்திய அரசு புரிந்துகொள்ளாமல், போராட்டக்காரர்களை பலவந்தமாக கைது செய்ததோடு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி ஆகியோரை டெல்லி காவல்துறை பலவந்தமாக கைது செய்திருப்பது, ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்ட வெளிப்படையான தாக்குதல் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.மாணவர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் உறுதியுடன் செயல்படுவோம் என்றும், மாணவர்களின் நலன் மற்றும் அவர்களின் உரிமைக் குரலுக்கு எப்போதும் துணை நிற்போம் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.