முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 102 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் திருமணக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். இங்கு திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாக முகூர்த்த நாட்களில் ஏராளமானோர் திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் செய்து வருகின்றனர். கடந்த 23-ந்தேதி ஆவணி மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் நடைபெற்றது. அன்றைய தினம் ஒரே நாளில் 104 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து, நாளை நடைபெற உள்ள முகூர்த்த நாளில் திருமணம் செய்வதற்காக இதுவரை 102 ஜோடிகள் பதிவு செய்துள்ளனர். மேலும், வரும் 17-ந்தேதி நடைபெற உள்ள திருமணத்துக்காக இதுவரை 52 ஜோடிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
Advertisement
அந்த நாளுக்கான பதிவுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திருப்பரங்குன்றம் கோவிலில் முதல் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மட்டுமே திருமணம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக திருமணத்துக்கு குறைந்தது 20 நாட்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். கோவிலில் உள்ள திருவாட்சி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள முத்துக்குமாரசுவாமி-தெய்வானை அம்பாள் சன்னதியில் திருமணங்கள் நடைபெறும். திருமண ஜோடி மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 20 பேருக்கு கருவறை தரிசன அனுமதி டிக்கெட், திருமணப் பதிவு கட்டணம் உள்ளிட்டவற்றுக்காக ஒரு ஜோடியிடம் ரூ.4,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை 102 ஜோடிகள் திருமணம் செய்ய பதிவு செய்துள்ளதால், கோவிலுக்கு ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.