திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து ஒப்படைக்க சென்னை மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உருவாகும் திடக்கழிவுகளை பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும், கழிவு உருவாகும் இடத்திலேயே முறையாகத் தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெருமளவில் கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள், திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன்படி கழிவுகளை மூலத்திலேயே பிரித்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவுகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட வேண்டும்: மக்கும் கழிவுகள் – பச்சை நிறத் தொட்டி:உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், பூக்கள் உள்ளிட்ட மக்கும் பொருட்களை இதில் சேகரிக்க வேண்டும். மக்காத கழிவுகள் – நீல நிறத் தொட்டி:காகிதம், பிளாஸ்டிக், உலோகம், அட்டைப்பெட்டிகள், துணிகள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை இதில் போட வேண்டும். சுகாதாரக் கழிவுகள் – சிவப்பு நிறத் தொட்டி: பயன்படுத்திய சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள், மருத்துவக் கட்டுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாகச் சுற்றி தனியாக ஒப்படைக்க வேண்டும். வீட்டு அபாயகரக் கழிவுகள் / சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள் – கருப்பு நிறத் தொட்டி: பேட்டரிகள், மின்விளக்குகள், டியூப் லைட்கள், மின்னணுக் கழிவுகள், காலாவதியான மருந்துகள், பெயிண்ட் டப்பாக்கள் உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை தனியாக வழங்க வேண்டும். கழிவுகளை உருவாகும் இடத்திலேயே பிரிப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். இதன் மூலம் மக்கும் கழிவுகளை உரமாக மாற்றவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும் முடியும். மேலும், குப்பைக் கிடங்குகளுக்குச் செல்லும் கழிவுகளின் அளவைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், பொதுச் சுகாதாரத்தையும் மேம்படுத்த முடியும். சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் வீடுகளில் இருந்து தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரிக்க அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நான்கு வகை கழிவு பிரிப்பு முறையை முறையாகச் செயல்படுத்தும் வகையில், மாநகராட்சியின் பேட்டரி மூலம் இயங்கும் கழிவு சேகரிப்பு வாகனங்களிலும் (BOVs) நான்கு வகை கழிவுகளையும் தனித்தனியாக சேகரிக்க நான்கு வண்ண அடையாளங்களுடன் கூடிய தனித்தனி குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.