Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு அறிவிப்பு... பொதுப் போக்குவரத்து இயங்குமா?

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு அறிவிப்பு... பொதுப் போக்குவரத்து இயங்குமா?
மேகதாது அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பையும் வலியுறுத்தி கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் கர்நாடகத்தில் பருவமழை போதிய அளவில் பெய்யாததால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பவில்லை.இதற்கிடையில், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீரை திறந்து விடுமாறு கடந்த மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தன.குறிப்பாக, கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார். இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகள் மற்றும் வாடகைக் கார், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.ஆனால் அதன் பின்னர் நிலைமை மாறியது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், கிருஷ்ணராஜசாகர் அணையைத் தவிர கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி ஆகிய அணைகள் நிரம்பும் நிலையை எட்டின. அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்ததால், தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.இதனால், அறிவிக்கப்பட்டபடி முழு அடைப்பு போராட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் சமீபத்தில் மீண்டும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடக அரசியல் கட்சிகள், கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தன.
Advertisement
இதையடுத்து திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.இருப்பினும், முழு அடைப்புக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னட கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள டாக்டர் ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சாரா கோவிந்த் உள்ளிட்ட சில முக்கிய அமைப்புகளின் தலைவர்கள், போராட்டத்துக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளனர்.அதேபோல், வாடகைக் கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களும் முழு அடைப்பில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன. தனியார் பள்ளிகளும் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆதரவு தெரிவித்திருந்த சில அமைப்புகள் தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளன.இந்நிலையில், பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மற்றும் கடைகள் முழு அடைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் நேற்று வேண்டுகோள் விடுத்தார். பின்னர், மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், காவிரி நீர் மற்றும் மேகதாது அணை தொடர்பான பிரச்சினைகளுக்காகவே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறினார். மேலும், யார் ஆதரவு அளித்தாலும், அளிக்காவிட்டாலும் கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு நிச்சயம் நடைபெறும் என்று தெரிவித்தார்.இதனால், இன்று கர்நாடகத்தில் கடைகள் திறக்கப்படுமா, பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில், காவிரி விவகாரத்தில் அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், முழு அடைப்பு போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என்றும் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் கன்னட கூட்டமைப்பை வலியுறுத்தியுள்ளனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு