முதல்-அமைச்சர் விஜய் வாகனத்தை மறிக்க முயன்ற 8 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை தலைமைச் செயலகம் அருகே முதல்-அமைச்சர் விஜயின் கான்வாய் வாகனத்தை மறித்து அவரை சந்திக்க முயன்ற ஆகாஷின் குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.போலீஸ் காவலில் உயிரிழந்த ஆகாஷின் குடும்பத்தினர், அவரது வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக் கோரி முதல்-அமைச்சரை சந்திக்க வந்திருந்தனர். நேற்று தலைமைச் செயலக நுழைவாயில் அருகே முதல்-அமைச்சரின் கான்வாய் வந்தபோது, அங்கு திரண்டிருந்த சிலர் பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி வாகனத்தை மறிக்க முயன்றனர்.இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுக்க முயன்றனர். அப்போது சிலர் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றனர். இதில் போலீஸ்காரர் முத்து கணேசுக்கு காலில் காயம் ஏற்பட்டது. மேலும், ஓடும் போது சக போலீஸ்காரர் ஒருவர் எதிர்பாராதவிதமாக நெஞ்சில் கையால் மோதியதில் ராம்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தலைமைச் செயலக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முதல்-அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார், அவரை சந்திக்க முயன்றவர்களை சுற்றிவளைத்து தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர்கள் கடந்த மார்ச் மாதம் மானாமதுரை போலீஸ் சரகத்தில் காவலில் உயிரிழந்த ஆகாஷின் பெற்றோர் ராஜேஷ் கண்ணன், ஆனந்தி, அவர்களது உறவினர்கள் மற்றும் தமிழ்நாடு இளையோர் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில் 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை வேறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரி முதல்-அமைச்சரிடம் மனு அளிக்க வந்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.