மழைக்காலம் இயற்கைக்கு புத்துயிர் அளிக்கும் அழகிய பருவமாகும். வெயிலின் வெப்பம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசுவதால் உடலுக்கும் மனதுக்கும் இதமான சூழல் உருவாகிறது. நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட நிலப்பரப்புகள் மழையால் ஈரப்பதம் பெற்று பசுமையாக மாறுகின்றன. மரங்களும் செடிகளும் செழித்து வளர்வதுடன், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி இயற்கையின் அழகை மேலும் அதிகரிக்கின்றன. இத்தகைய மகிழ்ச்சியான சூழலுடன், மழைக்காலத்தில் சில உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, மழைநீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் அதிக அளவில் பெருகுகின்றன. இதனால் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. மேலும், தூய்மையற்ற குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் டைபாய்டு போன்ற நோய்களும் ஏற்படலாம். மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பது, நோய் எதிர்ப்புத் திறன் குறைவது போன்ற காரணங்களால் புளூ காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட சுவாசப் பாதிப்பு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. குளிர்ந்த நீர், சுத்தமற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்களை அருந்துவதால் டான்சிலைடிஸ் எனப்படும் தொண்டை அழற்சி ஏற்படலாம். இதனால் தொண்டையில் வலி, குரல் மாற்றம் மற்றும் சில நேரங்களில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். மழையில் தலையில் ஈரம் நீண்ட நேரம் இருப்பது அல்லது குளிர்ச்சியான சூழல் காரணமாக சைனசைட்டிஸ் எனப்படும் சைனஸ் பாதிப்பும் ஏற்படலாம். இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு தலைவலி, தலையில் பாரம், மூக்கடைப்பு, தும்மல் மற்றும் கண்களில் அழுத்தம் போன்ற தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.
Advertisement
மேலும், ஆஸ்துமா உள்ளவர்கள் மழைக்காலத்திலும் பனிக்காலத்திலும் சுவாசிப்பதில் கூடுதல் சிரமத்தை எதிர்கொள்ளலாம். மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் மழைக்காலத்தில் நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும், பாதிப்பு ஏற்பட்டால் விரைவாக குணமடையவும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். - மழையில் நனைந்தாலோ அல்லது மழைநீரில் குளித்தாலோ, உடலையும் தலையையும் நன்றாகத் துடைத்து ஈரத்தை அகற்ற வேண்டும். - குடிப்பதற்கு பாதுகாப்பான, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். தேவையெனில் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிக்கலாம். - பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகளை நன்றாகக் கழுவிய பின்னரே உணவுக்குப் பயன்படுத்த வேண்டும். - கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். - மீதமுள்ள உணவுகளை மறுநாள் மீண்டும் சூடாக்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். - ஈக்கள் மற்றும் பிற பூச்சிகள் மொய்க்கும் திறந்தவெளி உணவுகளை வாங்கி சாப்பிடக் கூடாது. - வீட்டைச் சுற்றி மழைநீர் அல்லது அசுத்தமான நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கலாம். - கொசுக்களிடமிருந்து பாதுகாப்பு பெற வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் கொசு வலைகளைப் பொருத்தலாம். மழைக்காலத்தில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உரிய மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற வேண்டும். உடலுக்குத் தேவையான ஓய்வையும் அளிக்க வேண்டும். முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் மழைக்காலத்தை ஆரோக்கியமாகக் கழிக்கலாம்.