தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கொடைக்கானலைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழையும் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால், அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிவதுடன், காட்டாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் மலைப்பகுதிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கனமழை காரணமாக ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
மலைப்பாதைகளில் பயணம் மேற்கொள்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமுள்ள இடங்களுக்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.