மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: 11 மசோதாக்கள் நிறைவேற்றம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வந்த மழைக்கால கூட்டத்தொடர் அமளி, எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவடைந்தது.கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டத்தொடரில், டெல்லி போராட்டத்தில் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரம், ராமர் கோவில் அறக்கட்டளை நன்கொடையில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பலமுறை கடும் அமளி ஏற்பட்டதுடன், அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.எதிர்க்கட்சிகள் விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை வலியுறுத்தியபோதிலும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதன் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டன.இந்த கூட்டத்தொடரில் சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு திருத்த மசோதா, தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா, பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) திருத்த மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டன. இதில் இந்தியப் புள்ளிவிவரக் கழக மசோதாவைத் தவிர, மீதமுள்ள 11 மசோதாக்களும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தொடரின் இறுதியில் உறுப்பினர்கள் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடினர். இதையடுத்து மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடியும் அவையில் இருந்தார்.கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, இரு அவைகளிலும் ஏற்பட்ட தொடர் இடையூறுகள் நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பெரிதும் பாதித்ததாக தெரிவித்தார்.