நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவும், நடிகை மேதா சங்கரும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இதற்கு சமய் ரெய்னா தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பதிலளித்து, அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமய் ரெய்னா, டிசம்பர் மாதம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்ச்சிகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இதனால் மேதா சங்கரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு திருமணத்தை ஒத்திவைக்க வேண்டியிருக்கும் என்றும் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த மேதா சங்கர், திருமணம் தொடர்பாக பரவி வரும் தகவல்களை கிண்டல் செய்யும் வகையில் ஒரு மீமையும் பதிவிட்டுள்ளார். சமய் ரெய்னா தொகுத்து வழங்கிய ‘இன்டியாஸ் காட் லேட்டன்ட்’ நிகழ்ச்சியின் 2-வது சீசனில், மேதா சங்கர் நடிகர் வருண் தவான் மற்றும் ஷரோன் வர்மா ஆகியோருடன் நடுவராக பங்கேற்றார்.
Advertisement
இதையடுத்து, சமய் ரெய்னா மற்றும் மேதா சங்கர் இருவரையும் இணைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகத் தொடங்கின. எனினும், தாங்கள் இருவரும் காதலித்து வருவதாக சமய் ரெய்னாவோ அல்லது மேதா சங்கரோ இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேதா சங்கர் கடைசியாக அவினாஷ் திவாரி நடித்த ‘கின்னி வெட்ஸ் சன்னி 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்பு 2023-ம் ஆண்டு வெளியான ‘12த் பெயில்’ திரைப்படத்தில் விக்ராந்த் மாஸியுடன் இணைந்து ஷ்ரத்தா ஜோஷி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மேதா சங்கர் ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.