மின் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தல்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (23.9.2026) சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திற்குச் சென்று, மாநிலத்தின் மின் உற்பத்தி, மின் விநியோகம் மற்றும் நுகர்வோர் சேவைகள் தொடர்பான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தமிழகத்தின் தற்போதைய மின் தேவை, உற்பத்தி நிலவரம், புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத எரிசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம், மின் தேவை மற்றும் கிடைப்புத் திறனுக்கிடையேயான இடைவெளி உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும், நாடு முழுவதும் அதிகரித்து வரும் மின் தேவையால் ஏற்படும் தாக்கம், மின்சாரப் பரிமாற்றச் சந்தையில் இருந்து தேவையான அளவு மின்சாரத்தைப் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள், நிலக்கரி கிடைப்பதில் உள்ள சவால்கள், அதிக செலவு கொண்ட எரிவாயு மின் உற்பத்தி மற்றும் மத்திய மின் நிலையங்களில் ஏற்படும் எதிர்பாராத உற்பத்தித் தடைகள் குறித்தும் விளக்கப்பட்டது. அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அதிகரிக்கக்கூடிய மின் தேவையை முன்கூட்டியே கணித்து, அதை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் விரிவான செயல் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை மாநிலத்தின் மின் விநியோகத்தில் உள்ள பழைய கட்டமைப்புகள், முக்கிய மின் தடைகள், அதிகரிக்கும் மின் சுமையால் ஏற்படும் வலையமைப்பு நெரிசல், மின் விநியோகத் தரத்தை பாதிக்கும் காரணிகள், மழை மற்றும் புயல் உள்ளிட்ட இயற்கை காரணங்களால் ஏற்படும் பாதிப்புகள், களப்பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை சமாளிக்கும் வகையில் கூடுதல் மின்மாற்றிகள் மற்றும் புதிய மின் பாதைகள் அமைத்தல், அதிக சுமையுள்ள மின் வலையமைப்புகளை மேம்படுத்துதல், பழைய உபகரணங்களை மாற்றுதல் மற்றும் மின் தடைகளை விரைவாக சரிசெய்வதற்கான களப்பணிகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் நம்பகமான மின்சாரத்தை வழங்குவதுடன், மின் நுகர்வோர் சேவைகளையும் மேம்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் வலியுறுத்தினார். புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணுதல், சேவை மையங்களின் செயல்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் நுகர்வோர் சேவைகளை டிஜிட்டல் முறையில் எளிதாக்குதல் தொடர்பான எதிர்கால திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டன. SLDC, SCADA மையங்களில் ஆய்வு தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் செயல்படும் மாநில மின்பளு பகிர்வு மையமான SLDC-ஐ முதல்-அமைச்சர் பார்வையிட்டார். மாநிலம் முழுவதும் மின் உற்பத்தி, மின் கொள்முதல், மின் தேவை மற்றும் விநியோக நிலவரத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்து, மின் சுமையை சமநிலைப்படுத்தும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதேபோல், சென்னை மின் விநியோகக் கண்காணிப்பு மற்றும் தரவு சேகரிப்பு மையமான SCADA Control Centre-ஐயும் பார்வையிட்டார்.